உப்பு





                                                              



உப்பில்லா பண்டம் குப்பையிலே என்கிறது தமிழ் முதுமொழி. தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னகத்தின் அனைத்து மொழிகளிலும் உப்பிற்கு உப்பு என்பதே பெயராகும். பண்டைய காலத்தில் உப்பு என்பது அரிதான  உணவு பொருளாக இருந்திருக்கிறது, செய்யும் வேலைக்குக் கூலியாக உப்பு வழங்கப்பட்டுள்ளது. எகிப்தில் பிரமிடு கட்டுவதற்கு அடிமைகளுக்கு கூலியாக உப்பே வழங்கப்பட்டிருக்கிறது.  இன்று செய்யும் வேலைக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த சம்பளம் என்னும் சொல்லைப் பரித்தால் சம்பா + அளம் என்று வரும். சம்பா என்பது அரிசியைக் குறிக்கும். அளம் என்பது உப்பிற்கு வழங்கப்படும் மற்றொரு பெயராகும். அதாவது பண்டைய காலத்தில் வேலை செய்தால் பணத்திற்குப் பதிலாக உப்பையும் அரிசியையும் வழங்கும் வழக்கம் இருந்திருக்கிறது. அந்தச் சொல் வழக்குதான் இன்றும் நீட்சி பெற்றுச் செய்யும் வேலைக்குப் பெறும் பணம் சம்பளம் என்று வழங்கப்படுகிறது. சங்க இலக்கியம் பத்துப்பாட்டில் கூட வறுமையில் வாடும் புலவன் உப்பு இல்லாத கீரையை வேகவைத்து உண்ணும்  காட்சியைக் காண முடிகிறது. செல்வந்தர்களுக்கு மட்டுமே கிடைக்கும் பொருளாக உப்பு இருந்திருக்கிறது. இருபதாம்நூற்றாண்டிலே உப்பிற்காக மாபெரும் மக்கள் போரட்டம் இந்தியாவில் நடைபெற்றது. நம்மை ஆண்டு கொண்டிருந்த ஆங்கிலேயனின் பணபசிக்கு உப்பு உணவாக அமைந்தது. ஆங்கிலேயர் தம் வருமானத்தைப் பெருக்க எண்ணினர். புதிதாக வரி விதிக்க வேண்டும் என்கிற எண்ணம் முளைவிட்டது. அதிக வருமானத்தை ஈட்டித்தரும் வரிவிதிப்பு முறையை அவர்கள் ஆரய்ந்து பார்த்த போது அவர்களின் பண ஆசைக்கு உப்பு சுவைக்கூட்டியது. உப்பைப் பயன் படுத்தாத மக்கள் உண்டோ?  ஏழை பணக்காரன் என்ற பேதம் இன்றி அனைத்து மக்களும்  அன்றாடம் உணவிற்குப் பயன் படுத்தும் ஒரு பொருள் உப்பு. எனவே உப்பிற்கு வரி விதித்தனர். வரி விதிப்பிற்கு பின் உப்பின் விலை பன்மடங்கு பெருகியது. மக்கள் அவதிக்குள்ளாயினர். அதனால் அன்றைய காலக்கட்டத்தில் உப்பு, கடத்தல் பொருளில் முதன்மை பெற்றது. உப்புக் கடத்தலைத் தடுக்கும் பொருட்டு ஆங்கிலேய அரசாங்கம் பல இடங்களில் சோதனைச் சாவடிகளை அமைத்தது. அது மட்டும் இன்றி ஒவ்வொரு ஊர் எல்லைகளிலும் மகாண எல்லைகளிலும் முள்வேலி அமைத்து வணிகர்கள் விற்பனைக்குக் கொண்டு செல்லப்படும் பொருட்களைக் கண்கொத்தி பாம்பாகச் சோதனை செய்து உப்பிற்கு வரி விதித்தது ஆங்கிலேய அரசு. அப்படியிருந்தும்  உப்பு கடத்தல் பெருவாரியாக அரங்கேறியது. பல இடங்களில் சோதனை சாவடிகளில் இருந்த அதிகாரிகள் கையூட்டுப் பெற்றுக்கொண்டு உப்பு வணிகர்களுக்கு வரி விதிப்பைத் தவிர்த்தனர். உப்பின் விலையேற்றத்தால் மக்களின் பாடுதிண்டாட்டமானது. இதை பொறுக்காமல் காந்தியடிகள் ஆங்கிலேயரை எதிர்த்து தண்டியில் உப்புக் காய்ச்சி அறப்பேர் செய்ததைப் பற்றி நம் அனைவருக்கும் தெரியும். ஆங்கிலேயர்களோடு முடிந்துவிடவில்லை இந்த கொடுமை. இன்றும் உப்பு மீது திணிக்கப்படும் வன்முறை வேறு மாதிரி வேடம் பூண்டு அமைதியாக தன் அராஜகத்தை அரங்கேற்றுகிறது. இன்றை மருத்துவர்களும் மைய அரசாங்கமும் அயோடின் கலந்த உப்பைப் பயன் படுத்த வேண்டும் என்கிறது. உப்ப  வணிகத்தை பாமரர்களிடம் இருந்து பறித்து பெருவணிகர் கைக்கு மாற்றும் மறைமுக வேலையாகவே இது பார்க்கப்படுகிறது. அயோடின் கலந்த உப்பு அவசியமா என்பது தெரியவில்லை. வணிகத்திற்காக இத்தகைய மருத்துவ ஆய்வறிக்கைகள் வெளி வருவது உலக பொருளதாரமயமாக்கலின் ஒரு அங்கமாகவே இருக்கிறது. உப்பு வணிக அரசியல் கையில் பலமாகச் சிக்கி விட்டது. எதிர்காலத்தில் இந்தியா உப்பிற்காக இன்னொரு அறப்போரைச் சந்திக்காமல் இருந்தால் சரி.

Comments

Popular posts from this blog